| ADDED : நவ 26, 2025 03:21 AM
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே மலைக் கிராமங்களில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ் சேவையை, மீண்டும் அதே வழித்தடத்தில் துவக்க பொது மக்கள் வலியுறுத்து உள்ளனர். வருசநாட்டில் இருந்து சிங்கராஜபுரம், பூசனுாத்து, மேலப்பூசனுாத்து, காந்திபுரம், புதுக்கோட்டை, அரண்மனைப்புதுார், காமன்கல்லுார், குமணன்தொழு வழியாக கடமலைக்குண்டு செல்ல அரசு டவுன் பஸ் வசதி இருந்தது. இப்பகுதியில் ரோடு சேதமானதால் கடந்த சில மாதங்களுக்கு முன், டவுன் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது இப்பகுதிகளில் ரோடுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ஆனால் நிறுத்தப்பட்ட டவுன் பஸ் சேவை மீண்டும் துவக்கப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் கூறியதாவது: வருஷநாட்டில் இருந்து சிங்கராஜபுரம், பூசனுாத்து வழியாக 8 மலைக் கிராமங்களை கடந்து அரசு டவுன் பஸ் காலை 9:00 மணி, மாலை 4:00 மணிக்கு கடமலைக்குண்டு சென்று வந்தது. பொது மக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். தற்போது பஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால் 24 கி.மீ., தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என, தெரிவித்தார்.