| ADDED : மார் 17, 2024 06:31 AM
கம்பம்: நெல் கொள்முதலில் அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சுணக்கம் காட்டி வரும் நிலையில் தனியார் வியாபாரிகள் கொள்முதலில் ஆர்வம் காட்டுகின்றனர்.மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.தமிழக அரசின் நுகர்பொருள் வாணிய கழகம் ஆண்டுதோறும் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனுாரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை கம்பம், சின்னமனூர் பகுதிகளில் முடியும் தருவாயில் உள்ளது.தனியார் வியாபாரிகள் ஒரு மாதமாக கம்பம், சின்னமனூரில் முகாமிட்டு கொள்முதல் செய்துள்ளனர். அரசின் சார்பில் சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2203, தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.107 ஐ சேர்த்து ரூ.2310 ம், பொது ரகங்கள் குவிண்டாலுக்கு ரூ.2183, ஊக்கத் தொகை ரூ.82 சேர்த்து ரூ.2265 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாதமாக அரசு நிர்ணய விலையை விட அதிகம் விலைக்கு கொள்முதல் செய்து விட்டனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பே நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என மண்டல மேலாளர் அறிவித்தார். ஆனால் இது வரை கம்பம் உள்ளிட்ட ஊர்களில் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இனி திறந்தும் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பயன் இல்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.