| ADDED : ஜன 05, 2024 05:24 AM
போடி : போடி புதுக்காலனி ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை, கழிவுநீர் தேங்கியுள்ளதால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.போடி சுப்புராஜ் நகரிலிருந்து புதுக்காலனி செல்லும் ரோட்டின் இடையே ரயில்வே அகலப்பாதை அமைந்துள்ளது. இப்பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முழுவதும் முடிய வில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கன மழை நீர், தெருக்களில் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை கழிவு நீரும் இணைந்து சுரங்க பாதையில் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகரித்துள்ளன. இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குளம் போல கழிவுநீர் தேங்கியுள்ளதால் சுப்புராஜ் நகரிலிருந்து புதுக்காலனிக்கு அரை கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. 20 நாட்களுக்கு மேலாக தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்ற, ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.