| ADDED : ஜூன் 09, 2024 03:49 AM
பெரியகுளம் : பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரேடியாலஜி டாக்டர் கதிர்வீச்சு பணி காரணமாக மருத்துவமனை நிர்வாகம் ஒரு மாதம் விடுப்பு வழங்குவது வழக்கம். மாற்று பணிக்கு கூடுதல் ரேடியாலஜி டாக்டர் இல்லாததால் 'அல்ட்ரா ஸ்கேன்' மையம் ஒரு மாதம் மூடப்படும். இதனால் நோயாளிகள் அவதியை தவிர்க்க கூடுதலாக ரேடியாலஜி டாக்டர் நியமிக்க வேண்டும்.பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள வார்டு 36 ல் மிகை ஒலி ஆய்வு அல்ட்ரா சவுண்ட் இயங்கி வருகிறது. இதில் கல்லீரல், மண்ணீரல், கிட்னி, வயிற்றுக்கட்டி, புற்று கட்டி, நரம்புகளில் ரத்த ஓட்டம், கால்களில் வெரிகோஸ் வெயின், சிறுநீரக பிரச்னை, கர்ப்பிணிகளுக்கு குழந்தை வளர்ச்சி நிலை உட்பட இருவருக்கும் மற்ற உடல் உறுப்புகளுக்கு ஸ்கேன் இலவசமாக எடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தினமும் 70 முதல் 100 பேர் வரை ஸ்கேன் எடுக்க வருகின்றனர். ஆனால் 40 பேருக்கு மட்டும் தினமும் ஸ்கேன் பார்க்கப்படுகிறது. மற்றவர்கள் பதிவு அடிப்படையில் மறுநாள் பார்க்கப்படுகிறது.இந்த அல்ட்ரா ஸ்கேன் வெளியே தனியாரிடம் எடுத்தால் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3000 வரை செலவாகும்.இந்த மையத்தின் டாக்டர் பிரித்தாவின் பணி ஈடுபாட்டால் மையத்திற்கு மக்களிடம் வரவேற்பு பெற்றிருக்கிறது.ஆனால் ஒவ்வொரு ஆண்டும் டாக்டருக்கு ஒரு மாதம் விடுப்பில் செல்வது வழக்கம். கடந்த நவம்பரில் டாக்டர் விடுப்பில் சென்றபோது இந்த மையம் மூடப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் ஒரு மாதம் விடுப்பு எடுக்க உள்ளார். மருத்துவமனை நிர்வாகம் 'வருமுன் காப்போம்' அடிப்படையில் கூடுதலாக ரேடியாலஜி டாக்டரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-