| ADDED : பிப் 14, 2024 05:01 AM
மூணாறு, : மூணாறு வனத்துறை பிரிவுக்கு கீழ் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணியில் இருந்து நீக்க டி.எப்.ஓ., ரமேஷ்விஸ்னோய் உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மூணாறு வனத்துறை பிரிவுக்கு கீழ் மூணாறு, தேவிகுளம், அடிமாலி, நேரிய மங்கலம் ஆகிய வனசரகங்கள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் 77 தற்காலிக ஊழியர்களை நிதி பற்றாக்குறையை கூறி பணியில் இருந்து நீக்க மூணாறு டி.எப்.ஓ. ரமேஷ்விஸ்னோய் உத்தரவிட்டார். அதனை மார்ச் 31க்கு முன்பு நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.மூணாறு, தேவிகுளம் ஆகிய வன சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த சரகங்களில் 63 பேர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.987 ஊதியம் வழங்கப்படுகிறது. 30 நாட்கள் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் 63 பேரையும் பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.இவர்களில் பெரும்பாலானோர் வனவிலங்குகளின் நடமாட்டத்தை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவர்கள். தவிர யானை தடுப்பு பிரிவிலும் உள்ளனர்.அவர்களின் சேவை பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முயற்சிக்கும் வனத்துறை செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.