| ADDED : பிப் 02, 2024 12:05 AM
போடி-தேனி வனச்சரகம், வடக்கு மலை பகுதியில் காட்டு மாடு வேட்டையாடி கறியை வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.போடி டி.வி.கே.கே., நகரை சேர்ந்தவர்கள் சூர்யா 22. ஆகாஷ் 19. போடி புதூரை சேர்ந்தவர் சீனிவாசன் 25. பூதிப்புரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் 35. பொட்டிப் புரத்தைச் சேர்ந்த புலிப்பாண்டி, உத்தமபாளையத்தை சேர்ந்த ஜோசப்., ஆகிய 7 பேரும் சேர்ந்து தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடக்குமலை அருகே உள்ள வனப்பகுதியில் இறைச்சிக்காக காட்டு மாட்டை வேட்டையாடி, வேல் கம்பால் குத்தி கொன்றுள்ளனர். காட்டு மாடு இறைச்சியை விற்பனைக்காக சூர்யா என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர்.வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தேனி ரேஞ்சர் செந்தில்குமார் தலைமையில், போடி ரேஞ்சர் நாகராஜ், வனவர், வனத்துறையினர் நேற்று சூர்யாவின் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். இதில் வீட்டில் காட்டு மாட்டின் இறைச்சி 120 கிலோ பதுக்கியது தெரிந்தது. அங்கிருந்த சூர்யா, ஆகாஷ் இருவரையும் கைது செய்து, மாட்டிறைச்சி, வேல், கம்பு, கத்தியையும் பறிமுதல் செய்தனர். வனத்துறை சோதனையை அறிந்த ராஜ்குமார், புலிப்பாண்டி, சீனிவாசன், ஜோசப் ஆகிய நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.