உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசி பகுதியில் நெற்பயிர்காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு

தென்காசி பகுதியில் நெற்பயிர்காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு

தென்காசி:தென்காசி பகுதியில் நெற்பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:''தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் நடப்பு கார் பருவத்தில் பயிரிடப்படும் நெற்பயிருக்கான காப்பீடு தொகையை அறிவித்துள்ளது. இப்பருவத்தில் கடன் பெறும் விவசாயிகள் கடன் பெறும் தொகைக்கும், கடன் பெறா விவசாயிகள் சராசரி மகசூல் மதிப்பான ஏக்கருக்கு 13 ஆயிரத்து 556 ரூபாய் அல்லது இதை விட கூடுதல் மகசூல் கிடைக்கும் என நம்பினால் ஏக்கருக்கு 22 ஆயிரத்து 590 ரூபாய்க்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.விவசாயிகள் கடன் பெறும் தொகையில் அல்லது காப்பீடு தொகையில் சராசரி மகசூலுக்கு 25 சதவீதமும், கூடுதல் மகசூலுக்கு 3.25 சதவீதமும் பிரிமியமாக செலுத்த வேண்டும்.

இதன்படி கடன் பெறும் சிறு மற்றும் குறு விவசாயிகள், கடன் பெறாத இதர விவசாயிகள் அரசு அளிக்கும் மானியம் 50 சதம் தவிர்த்து சராசரி மகசூலுக்கு 169 ரூபாய் அல்லது கூடுதல் மகசூலுக்கு 316 ரூபாய் பிரிமியமாக செலுத்த வேண்டும். கடன் பெறாத சிறு மற்றும் குறு விவசாயிகள் அரசு அளிக்கும் மானியம் 55 சதம் தவிர்த்து சராசரி மகசூலுக்கு 153 ரூபாய் அல்லது கூடுதல் மகசூலுக்கு 285 ரூபாய் பிரிமியமாக செலுத்த வேண்டும்.கடன் பெறாத விவசாயிகள் இன்றும் (15ம் தேதி), கடன் பெறும் விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள்ளும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பாங்குகளில் அல்லது சேமிப்பு கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட பாங்குகளில் பிரிமிய தொகையை செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். தென்காசி வட்டாரத்தில் தென்காசி, பண்பொழி, இலத்தூர் குறுவட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 2009-10ம் ஆண்டு இத்திட்டத்தில் சேர்ந்து கார் பருவ நெற் பயிரை காப்பீடு செய்த தென்காசி வட்டாரத்தை சேர்ந்த 169 விவசாயிகள் 4 லட்சத்து 72 ஆயிரத்து 204 ரூபாய் காப்பீடு தொகை பெற்று பயனடைந்தனர்'' என வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) உதயகுமார் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ