திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் பலியான ஐந்து மாணவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்குப் பின் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆந்திர மாநிலம், பார்த்தி கொண்டா கிராமத்தைச் சேர்ந்த ராம் மோகன், 21, திருப்பதி யுகேஷ் யாதவ், 21, கடப்பா மாவட்டம் நிதிஷ், நலகொண்டா மாவட்டம் நிதிஷ் வர்மா, 19, பிரகாசம் மாவட்டம் சைதன்ய குமார், 21, நெல்லுார் மாவட்டம், விஷ்ணு வர்தன், 19 ஆகியோர், சென்னை காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் அனைவரும், காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இவர்களுடன், திருப்பதியைச் சேர்ந்த சேத்தன், 24 என்பவர் தங்கி உள்ளார்.இவர்கள் ஏழு பேரும், மாருதி எர்டிகா காரில், கடந்த, 10ம் தேதி இரவு, திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்றனர். காரை, சேத்தன் ஓட்டினார். நேற்று முன்தினம், ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள காணிப்பாக்கம் கோவிலுக்குச் சென்று விட்டு, மாலையில் தாங்கள் தங்கியுள்ள விடுதிக்கு காரில் புறப்பட்டனர். மாலை 6:40 மணியளவில், திருத்தணி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில், ராமஞ்சேரி அருகே வந்த போது, எதிரில் வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரியில் கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.காயமடைந்த சைதன்ய குமார், விஷ்ணு வர்தன் ஆகிய இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று காலை, அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்த ஐந்து பேரின் உடல்கள் நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்திய பின், அவர்களின் உடல், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.