திருத்தணி: குப்பையில் இருந்து, 'பசுமை உரக்குடில்' என்ற உரம் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் பசுமை உரம் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் நேற்று முதல் திருத்தணி நகராட்சியில் அமல்படுத்தியுள்ளன. இதனால் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளை உள்ளடக்கி 12.42 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 44 ஆயிரத்து, 781 பேர் உள்ளனர். மேலும் நகராட்சியில், 13 ஆயிரத்து, 41 வீடுகள் உள்ளன. இது தவிர, திருத்தணி நகருக்கு தினமும், 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் நகராட்சியில் ஒரு நாளைக்கு, 17 டன் குப்பை சேருகிறது.இந்த குப்பைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள், 40 பேரும், தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள், 110 பேர் என மொத்தம், 150 பேர், 21 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்கா குப்பைகள் தனித்தனியாக பிரித்து சேகரிக்கின்றனர்.தினமும் 9 டன் மக்கும் குப்பையும், 8 டன் மக்கா குப்பையும் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண் மை விதி, 2016ல் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி மட்கும் மற்றும் மட்கா திடக்கழிவுகள் தரம் பிரிக்கப்படுகின்றன.இதற்காக, 20வது வார்டு பெரியார் நகரில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கும் குப்பைகளை இயந்திரம் மூலம் அரைத்து அங்குள்ள தொட்டிகள் மூலம் குப்பைகளை பதப்படுத்தி, விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கப்பட்டு வந்தன.இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் உரத்தில் இருந்து வருவாய் ஈட்டுவதற்கு தீர்மானித்து, உரக்குடிலில் உள்ள செயலாக்க மையத்தில் இயற்கை உரம் தயாரித்து நகராட்சி அலுவலகத்தில், செழிப்பு - இயற்கை உரம், 1 கிலோ முதல், 10 கிலோ வரை பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நகராட்சி அலுவலகம் நுழைவு வாயிலில் ஸ்டால் அமைத்து, இயற்கை உரம் பைகளை அடுக்கி வைத்து, பொதுமக்களுக்கு, ஒரு கிலோ, 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் கூறியதாவது:நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும், 9 டன் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கிறோம். இந்த உரத்தை நன்கு அரைத்தும், சல்லடை மூலம் சலிப்பு செய்து பைகளில் அடைத்து விற்பனை செய்கிறோம். நேற்று முதல் விற்பனை துவங்கியுள்ளோம். தினமும் 400 கிலோ உரம் தயாரிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு, சலிப்பு இல்லாத உரத்தையும், மாடி வீட்டு தோட்டம், வீட்டுத் தோட்டம் போன்றவைகளுக்கு சலிப்பு செய்த, உரம் விற்பனை செய்கிறோம். காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணிவரை விற்பனை செய்கிறோம். உரம் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், 044—27885258 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உரம் உங்கள் வீடு தேடி வரும். பொதுமக்கள் ஆதரவு அதிகளவில் இருந்தால் உரம் விற்பனை அதிகரிப்பதுடன், நகராட்சி வருவாயும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.