| ADDED : ஜூன் 12, 2024 02:28 AM
திருத்தணி:திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், இளங்கலை பட்டப்படிப்பு பி.எஸ்.சி., பி.காம் பொது, பி.ஏ., பி.சி.ஏ., போன்ற படிப்புகள் உள்ளன. இதில் ஆண்டுக்கு, 676 மாணவ-- மாணவியர் முதலாமாண்டில் புதியதாக சேர்க்கப்படுவர். அந்த வகையில் நடப்பாண்டில் அரசு கல்லுாரியில் சேர்வதற்கு மாணவர்கள் இணைதளம் மூலம் மொத்தம், 6,002 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் கல்லுாரி வளாகத்தில் துவங்கியது. கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் தலைமையில், பேராசிரியர்கள் ஜெய்லாப்பூதீன், பாலாஜி, ரமேஷ், ஹேமநாதன், உள்பட துறை தலைவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது. நேற்று முன்தினம், 66 மாணவ-- மாணவியர், நேற்று 40 மாணவ-- மாணவியர் என மொத்தம், 106 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். நாளை பி.ஏ., வரலாறு, பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிகழ்ச்சி 20ம் தேதிக்கு பின் நடைபெறும் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.