திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் அல்லிகுழியில், வனத்துறை சார்பில் 1916ல் கட்டப்பட்ட, நுாறாண்டு கடந்த ஓய்வு விடுதி பராமரிப்பின்றி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி பகுதி காடு, மலைகளைக் கொண்டது. ராமஞ்சேரியில் துவங்கி, கனகம்மாசத்திரம், பப்பிரெட்டிகண்டிகை, சீத்தஞ்சேரி, பென்னலுார்பேட்டை, அல்லிகுழி, பூண்டி வரை அடர்ந்த மரங்கள் கொண்ட மலைப்பகுதி இது. தமிழக-ஆந்திர எல்லையில் இம்மலை பகுதி அமைந்து உள்ளது.இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், காடு, மலைகளில் தங்கி ஓய்வெடுக்க தங்கும் விடுதிகளை கட்டினர். இதே போன்ற ஓய்வு விடுதி பூண்டியில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ள அல்லிகுழியிலும், ஒன்று உள்ளது. கடந்த, 1916ம் ஆண்டு, அல்லிகுழி-பப்பிரெட்டிகண்டிகை செல்லும் வழியில், கட்டி உள்ளனர்.வனத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த ஓய்வு விடுதிக்கு, ஆங்கிலேயர்கள் செங்கல்பட்டு, ஸ்ரீ்பெரும்புதுார், திருவள்ளூர் வழியாக திருப்பாச்சூர் வந்து, பின், அங்கிருந்து, ராமஞ்சேரி, பப்பிரெட்டிகண்டிகை வழியாக, அல்லிகுழி வன ஓய்வு விடுதிக்கு வந்து சென்று உள்ளனர். இதற்காக ராமஞ்சேரி, பப்பிரெட்டிகண்டிகை வழியாக அல்லிகுழி வரை குதிரைகள் செல்லும் வகையில் வண்டிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதை இன்றளவும் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த பாதையை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 108 ஆண்டு நிறைவு
அல்லிகுழியில் கட்டப்பட்டு உள்ள வன ஓய்வு விடுதி இந்த ஆண்டுடன்நுாற்றாண்டு நிறைவு பெறுகிறது. சமையல் அறை, இரண்டு படுக்கையறை, சமையல் பொருட்கள் வைக்கும் அறை மற்றும் கழிப்பறை வசதியுடன் இந்த ஓய்வு விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டு உள்ளது. மலைமேல், அடர்ந்த மரங்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ஓய்வு விடுதி, ஏ.சி., வசதி இல்லாமலேயே இயற்கையான குளுகுளு வசதியுடன் உள்ளது. இதனை கட்டி முடிக்க, 1,777 ரூபாய் மட்டுமே செலவானது குறிப்பிடத்தக்கது. தற்போது, இதன் வயது 108 ஆண்டு.பராமரிப்பு இல்லாமல் இருந்த ஓய்வு விடுதி, கடந்த 2001ல் சீரமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. இருப்பினும், சீரமைக்கப்பட்ட வனவிடுதி, தொடர்ந்து பயன்பாட்டிற்கு வராமல், முற்றிலும் சேதமடைந்து விட்டது.கதவு, ஜன்னல்கள் அனைத்தும் உடைந்து சேதமடைந்து விட்டன. நுாறாண்டை கடந்த, வரலாற்றை நினைவு கூறும் அல்லிகுழி வன ஓய்வு விடுதியை சீரமைத்து, பாரம்பரியத்தை காக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.