| ADDED : ஜூன் 18, 2024 05:57 AM
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தின் வடக்கில் கல்யாண சுந்தரேசனார் கோவில் உள்ளது. இந்த கோவில் குளக்கரையை ஒட்டி, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் திங்கட்கிழமைகளில் வார சந்தை கூடுகிறது. இந்நிலையில், இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்விசை குழாய் வாயிலாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், சந்தைக்கு வரும் வியாபாரிகள், பகுதிவாசிகள் என பலரும் பயனடைந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த சிறு மின்விசை குழாயை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால், சிறுமின்விசை குழாய் அருகே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சிறுமின்விசை குழாயை ஒட்டி, திறந்தநிலை கழிவுநீர் கால்வாய் பாய்கிறது. இதனால், இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாய்க்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்கவும், சிறுமின்விசை குழாயை சுத்தமாக பராமரிக்கவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.