| ADDED : ஜூன் 24, 2024 04:50 AM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியின் கட்டடம் சேதமடைந்தது. அதை தொடர்ந்து, சேதமடைந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, அங்கு, கடந்த, 2022ல், தனியார் தொழிற்சாலைகளின் சி.எஸ்.ஆர்., நிதியின் வாயிலாக, 18.90 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது.புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் மேற்கெள்வதற்காக, பள்ளியின் முகப்பில் இருந்த சுற்று சுவர் இடிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து, கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வந்து, ஓராண்டு ஆன நிலையில், இதுவரை உடைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் சுற்று சுவர் அமைக்கப்படவில்லை.சாலையோர வளைவுப்பகுதியில் பள்ளி இருப்பதால், மாணவர்கள் விளையாடும்போது தவறுதலாக சாலையில் பயணிக்கும் வாகனங்கள் பள்ளி வளாகத்திற்கு புகுந்தால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.மேலும், முகப்பு சுற்று சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், கால்நடைகளின் இருப்பிடமாகவும் மாறுகிறது.பள்ளி இயங்காத நேரங்களில் தனிநபர்கள் தங்களது வாகனங்களை இங்கு நிறுத்தி பார்க்கிங் ஏரியாவாக மாற்றி வருகின்றனர்.மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மேற்கண்ட பள்ளியின் முகப்பில், உடைக்கப்பட்ட பகுதியில் சுற்று சுவரை அமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.