சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா, 24. செவிலியர் படிப்பை முடித்த இவர், ஓராண்டாக, தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தார்.தி.நகர், தெற்கு போக் சாலையில் உள்ள மருத்துவமனை பணியாளர்களுக்கான விடுதியில் தங்கி வந்தார்.சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி, 29, என்ற வாலிபரை காதலித்து, கர்ப்பமானார்.ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த வினிஷா, இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், ஏப்., 30ல் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், விடுதி கழிப்பறைக்கு சென்று, தனக்கு தானே பிரசவம் பார்த்தார். அப்போது, சிசுவின் கழுத்தை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் வெட்டியதுடன், இரண்டு கால்களையும் துண்டாக்கினார்.இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், வினிஷாவை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். வெட்டப்பட்ட சிசுவின் உடல் பாகங்களை, மாம்பலம் போலீசார் கைப்பற்றி, விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கொலை மற்றும் கொலை செய்ததை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வினிஷா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.