பொன்னேரி:பொன்னேரியில், துணை மின்நிலையம் 1955ம் ஆண்டு, இங்கு நிறுவப்பட்டது. இங்கிருந்து, பொன்னேரி நகரம், அனுப்பம்பட்டு, திருவேங்கிடபுரம், பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், சின்னகாவணம், உப்பளம், எலவம்பேடு என, 100க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது.விவசாயம், வணிகம், குடியிருப்பு, சிறுதொழில்கள் என, 1 லட்சம் மின்இணைப்புகள் உள்ளன. புதிய மின்இணைப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், துணைமின்நிலையம் தரம் உயர்த்தப்படாமல் இருக்கிறது. மின்நிலையம் அமையும்போது பொருத்தப்பட்ட மின் உபகரணங்களின் உதவியுடன் மின்வினியோகம் தொடர்கிறது.துணைமின்நிலையத்தில் உள்ள மின்மாற்றிகள் காலாவதியாகி போன நிலையில், அவ்வப்போது பழுதாகி மின்வெட்டு ஏற்படுகிறது.அறிவிக்கப்படாத மின்வெட்டால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். விவசாயிகள், வியாபாரிகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.மின்வெட்டை சரிசெய்யாத அரசை கண்டித்து, நேற்று மார்க்சிஸ்ட் சார்பில், பொன்னேரி வேண்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட குழு உறுப்பினர் ஹனிப் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயன், மாவட்ட செயலர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.