சென்னை: மதுரையைச் சேர்ந்த முத்து சரவணன், பாபு என்ற ரவுடிகள், சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகர் விரிவு பகுதியில் கேட்பாரற்று இருந்த, 9,200 சதுர அடி நிலத்தை அபகரிக்க முயன்றனர். சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவனர், முருகேசன் , 33 என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் செல்வம், 37 என்பவர் இடையூறாக இருந்தார். இதனால், 2022ல் செல்வம் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், ஜாமினில் வெளிவந்த முருகேசனும், அவரது கும்பலை சேர்ந்தவர்களும், சென்னை, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் பார்த்திபன், 54 என்பவரை கடந்த ஆண்டு கொலை செய்தனர். இந்த வழக்கில், டில்லியில் பதுங்கியிருந்த ரவுடிகள் முத்துசரவணன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். அதே ஆண்டில், செங்குன்றம் அருகே, சோழவரத்தில் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தலைமறைவாக இருந்த முருகேசன், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சமீபத்தில் ஜாமினில் வெளி வந்த முருகேசன், எண்ணுாரைச் சேர்ந்த ரவுடி கும்பல் தனக்கு போட்டியாக உருவாகி வந்ததால், அவர்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இந்த தகவலை சேகரித்த உளவுத்துறை அதிகாரிகள், போலீசாரை எச்சரித்தனர். இந்நிலையில் சேலத்தில் பதுங்கி இருந்த கூலிப்படை தலைவன் முருகேசனை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.