உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை பா.ஜ., நிர்வாகி உட்பட இருவர் கைது: பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கினான்

பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை பா.ஜ., நிர்வாகி உட்பட இருவர் கைது: பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கினான்

ஊத்துக்கோட்டை:பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகி உள்ளிட்ட இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை காவல் சரக உட்கோட்ட பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. கடந்த, 22ல் ஊத்துக்கோட்டை அடுத்த பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன், 30, வீட்டின் பூட்டை உடைத்து, 5 சவரன் நகை, 900 கிராம் வெள்ளி பொருட்கள், 2 லட்சம் ரூபாய் மற்றும் பைக் ஆகியவை மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்படி, குற்றவாளிகளை கைது செய்ய, எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமையில் தனிப்பைடை அமைக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். அங்குள்ள 'சிசிடிவி' பதிவை வைத்து குற்றவாளிகளை தேடினர். இந்நிலையில் கடந்த, 28ல் ஊத்துக்கோட்டை அண்ணாதுரை சிலை அருகே தனிப்படையினரின் வாகன சோதனையின் போது, அப்பகுதியில் காரில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தோமூர் பிரபாகரன், 38, பூண்டி கேசவன், 28 என்பது தெரிந்தது. பெரம்பூர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை அடித்தது மற்றும் வெங்கல், பெரியபாளையம், பென்னலுார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைகளில் பூட்டப்பட்டு இருந்த, 13 வீடுகளில் நகை, பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.கொள்ளை அடித்த பொருட்கள் அனைத்தும் ஆந்திர மாநிலம் தாசுகுப்பம் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். போலீசார் அங்கு சென்று, 85 சவரன் நகைகள், 900 கிராம் வெள்ளி, பொருட்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரபாகரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி துணை தலைவராவார்.

தோமூரில் சொகுசு வாழ்க்கை

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி துணை தலைவரான தோமூர் பிரபாகரன் மீது ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், பென்னலுார்பேட்டை காவல் நிலையங்களில் 13 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர் மீது கொலை வழக்கும் உள்ளது.கொள்ளை அடித்த பணத்தில் தன் சொந்த ஊரில் பங்களா வீடு கட்டி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் பா.ஜ., மாநில பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமனுக்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாந்தோப்புகளை பிரபாகரன் பராமரித்து வந்துள்ளார். கல்யாணராமன் வாயிலாகவே பிரபாகரன் கட்சி பொறுப்பு பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ