| ADDED : ஜூன் 01, 2024 05:58 AM
திருத்தணி: திருத்தணி நகராட்சி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் அரசு மருத்துவமனை, கீழ் பஜார் தெரு, பாரதியார் தெரு, பெரிய தெரு, மேட்டுத் தெரு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.மேட்டுத் தெருவில் உள்ள தானியங்கி ரயில்வே கேட் மூடப்படும் போது அதிகளவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 15 நாட்களாக, ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் ஆறாக செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் கழிவுநீரில் இறங்கி செல்கின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெள்ளமாக செல்கிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் நகர மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.