| ADDED : ஜூலை 12, 2024 10:03 PM
திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனையில், ஆய்வக பிரிவில், ஒருவர் மட்டுமே பணி செய்வதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர, 150க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கியும், சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தில் ஐந்து பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது, ஒரே ஒரு நிரந்தர பெண் ஊழியர் மட்டும் பணியாற்றுகிறார். இந்த மருத்துவமனையில், 24 மணி நேரமும் ரத்த பரிசோதனை மற்றும் ஆய்வகம் செயல்படுகிறது.தினசரி ரத்தம் உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்வதற்காக, 250 -- 400 பேர் வருகின்றனர். ஒரு ஊழியர் இருப்பதால், இரவு நேரத்தில் நிரந்தர ஊழியரும், பகல் நேரத்தில் மூன்று தற்காலிக ஊழியர்களும் வேலை செய்கின்றனர். எனவே, கூடுதல் ஆய்வக ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என, நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, திருத்தணி அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆய்வகத்தில் இரண்டு நிரந்திர பணியிடம் தான் ஒதுக்கீடு உள்ளது. தற்போது ஒரு பெண் ஊழியர் உள்ளார். மூன்று ஊழியர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து மாவட்ட இணை இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.