| ADDED : மே 31, 2024 02:39 AM
திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் அருகே, நீதிபதிகள் மற்றும் தாசில்தார் தங்குவதற்கு மூன்று குடியிருப்புகள் கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் நீதிபதிகள், தாசில்தார் ஆகியோர் குடியிருப்புகளில் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருந்தனர். தொடர்ந்து குடியிருப்பு கட்டடங்களை முறையாக பொதுப்பணித் துறையினர் பராமரிக்காததால் நீதிபதிகள் குடியிருப்பில் தங்கி வருவதை புறக்கணித்தனர்.அதே நேரத்தில் தாசில்தார் குடியிருப்பில் மட்டும், கடந்த மூன்று ஆண்டுகள் முன் வரை தாசில்தார் தங்கியிருந்தனர். பின் தாசில்தார் குடியிருப்பில் அதிகாரிகள் தங்காததால் கட்டடம் பராமரிப்பின்றி உள்ளது. இதுதவிர குடியிருப்பு வளாகத்தில் செடிகள் வளர்ந்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் அரசு பணம் பல லட்சம் ரூபாய் வீணாகிறது. மேலும் கட்டடங்களும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து தாசில்தார் மற்றும் நீதிபதிகள் தங்கும் குடியிருப்புகளை பழுது பார்ப்பு பணிகள் முடித்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர். வி.ஏ.ஓ., அலுவலகம்
பழைய தாசில்தார் அலுவலகம் பின்புறம் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வந்தது. இங்கு தினசரி திருத்தணி கிராம நிர்வாக அலுவலர் வந்து நகர மக்களுக்கு தேவையான அனைத்து சான்றுகளும் வழங்குவர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலகம் ஒதுக்குப்புறமாக உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்திற்கு செல்லாமல் கிராம நிர்வாக அலுவலர்கள் இருந்தனர். இதனால் அந்த கட்டடம் உரிய பராமரிப்பின்றியும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்போது அந்த கட்டடத்தில் இளைஞர்கள் மதுகுடிப்பதும், சீட்டாட்டம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், கட்டடம் முழுதும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலக கட்டடம் பயன்படுத்தாமல் உள்ளதால் அரசு பணம் வீணாகிறது.இதனால், கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அந்த கட்டடத்திற்கு செல்லாமல் காந்திரோடு பகுதியில் வாடகைக்கு வீடு அல்லது அறை எடுத்து புணிபுரிகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் திருத்தணி கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுவதற்கு புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும் என வருவாய் துறை ஊழியர்கள் எதிர்பார்கின்றனர்.