திருவள்ளூரில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. தொடர் மழை காரணமாக, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஆவடியில் 10.8 செ.மீட்டர் மழை பதிவாகியது. தொடர் மழை காரணமாக திருவள்ளூர் ரயில்நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் பயணியர், சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் பரிதவித்தனர்.பயணியரின் வேண்டுகோளை அடுத்து, ரயில் தண்டவாளத்தில் அடைக்கப்பட்டிருந்த கதவை ரயில்வே துறையினர் திறந்து, பயணியர் செல்ல அனுமதித்தனர். மாலையில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டதும், பயணியர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு மழையின் போதும், சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கி விடுவதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் தடுக்க, ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வயலில் சாய்ந்த நெற்கதிர்கள்
ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றப்பகுதியில், கடந்த சில வாரங்களாக தினசரி மழை பெய்து வருகிறது. இதனால், வயல்வெளியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பாசனத்திற்கு தேவை இல்லாத அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பது மகிழ்ச்சியே. அதே நேரத்தில் அறுவடைக்காக காத்திருக்கும் நெல் வயலில் நெற்கதிர்கள் நீர்பாசனம் இன்றி சிலநாட்களுக்கு கிடந்தால் மட்டுமே நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியும். இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்கதிர் பசுமையாக நீடிப்பதுடன், மழையில் நனைந்து பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்து கிடக்கின்றன. நெல்கதிர்கள் ஈரத்தன்மையுடன் உள்ளதால், அறுவடைக்கு முன்னரே, முளைவிடும் அபாய நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாடுபட்டு விளைவித்த பயிர், பயனின்றி போகுமோ என அச்சத்தில் தவித்து வருகின்றனர். மழைப்பொழிவு ஓய்ந்து, அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்தால் மட்டுமே நெற்பயிரை விவசாயிகள் அறுவடை செய்ய இயலும். தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. இரவு துவங்கி, மறுநாள் காலை வரை இடைவிடாது தொடர் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மழைநீர் தேங்கியது. சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை, ஓபுளாபுரம், எளாவூர் ஆகிய பகுதகளில் உள்ள இணைப்பு சாலைகளில் குளம் போல் மழை வெள்ளம் தேங்கி நின்றதுகும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்க பாதையில் மழைநீர் சூழந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து சென்றனர்.
மாவட்டத்தில் பெய்த மழையளவு (செ.மீட்டரில்)
இடம்-மழையளவுஆவடி-10.8திருவாலங்காடு-7.2திருவள்ளூர்-6.3பொன்னேரி-6.1சோழவரம்-5.7பூண்டி-5.2கும்மிடிப்பூண்டி-5.0செங்குன்றம்-4.9தாமரைப்பாக்கம்-4.9ஊத்துக்கோட்டை-4.2பூந்தமல்லி-3.5ஜமீன் கொரட்டூர்-3.4ஆர்.கே.பேட்டை-3.2பள்ளிப்பட்டு-2.5திருத்தணி-2.1- நமது நிருபர் குழு-