திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்து, 20 பயனாளிகளுக்கு, 65.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., சீனிவாச பெருமாள் முன்னிலையில், கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதான புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான மூவர்ண பலுான்களையும் பறக்கவிட்டார்.தொடர்ந்து 23 சுதந்திர போராட்ட தியாகிகள், 4 மொழி போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 412 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், 20 பயனாளிகளுக்கு 65.56 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கினார்.மேலும், பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ - மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருத்தணி
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., தீபா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.திருத்தணி தளபதி மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் கல்லுாரியில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். ஆர்.கே.பேட்டை
ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொன்னேரி
பொன்னேரி அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தேசிய கொடியேற்றினார். இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் பொன்னேரி நேதாஜி சமூக நல இயக்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை பொன்னேரி கூடுதல் மாவட்ட நீதிபதி கிருஷ்ணசாமி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ரேட் ஐயப்பன் ஆகியோர் துவக்கி வைத்து, ரத்ததானம் அளித்தனர். முகாமில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று ரத்ததானம் அளித்தனர். திருவள்ளூர் மாவட்ட போட்டோ, வீடியோகிராபர் சங்கம் மற்றும் குவியம் அறக்கட்டளை சார்பில், பொன்னேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சிவகுமார் தேசியக்கொடி ஏற்றினார். கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி., கிரியாசக்தி தேசியக்கொடி ஏற்றினார். திருவாலங்காடு
திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.திருவாலங்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஒன்றிய சேர்மன் ஜீவா விசயராகவன் ஏற்றினார்.சமபந்தி விருந்துதிருத்தணி முருகன் கோவிலில், நேற்று மதியம் 12:00 மணிக்கு மூலவர், முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சமபந்தி விருந்து நிகழ்ச்சி மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடந்தது. இதில், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், கோவில் இணை ஆணையர் ரமணி, கோவில் அறங்காவலர் நாகன் பங்கேற்று சமபந்தி விருந்தை துவக்கி வைத்தனர். இதில், 2,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.- நமது நிருபர் குழு -