பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இரண்டு துறைமுகங்கள், கப்பல் கட்டும் நிறுவனமும், அத்திப்பட்டு, புதுநகர் மற்றும் வல்லுாரில் ஐந்து அனல்மின் நிலையங்கள், எரிவாயு மற்றும் பெட்ரோலிய முனையங்களும் உள்ளன.இந்நிறுவனங்களுக்கு வடமாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், தச்சூர் -- பொன்னேரி -- மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலை வழியாக பயணிக்கின்றன. இவற்றால் பொன்னேரி, மீஞ்சூர் நகர பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொன்னேரி பகுதியில் பள்ளி, கல்லுாரிகள் அதிகம் இருப்பதால், மாணவர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி, 2023 செப்டம்பர் மாதம், இச்சாலையில், காலை 6:00 - இரவு 10:00 மணி வரை கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டது.தடை விதிக்கப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் மீஞ்சூர் -- வண்டலுார் வெளிவட்ட சாலையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.இதை மீறும் கனரக வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.பொன்னேரி - மீஞ்சூர் சாலையில் உள்ள கன்டெய்னர் முனையங்கள், பகல் நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதால், தொழில் பாதிப்பு ஏற்படுவதாகவும், நேரக்கட்டுப்பாட்டில் தளர்வுகள் செய்யவும் கோரி நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம், தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள், காலை 10:00 - மதியம் 2:00 மணி வரையும், இரவு 9:00 - காலை 6:00 மணி வரையும் பயணிக்க அனுமதி வழங்கி, பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் உத்தரவிட்டார்.இந்நிலையில், கனரக வாகனங்கள் தடையை மீறி, காலை - மாலை நேரங்களில் இச்சாலையில் பயணிக்கின்றன. இதனால், பள்ளி கல்லுாரி மாணவர்கள், பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.தனியார் பள்ளி கல்லுாரி வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின்றன. இதனால் அசம்பாவிதங்களுக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பயணிக்கும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.