கோயம்பேடு: அண்ணாநகர் அடுத்த ஷெனாய் நகர் வெங்கடாசலம் 3வது தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட், 52. இவர், எழும்பூரில் உள்ள நீச்சல் குளத்தின் பொறுப்பாளராக பணிபுரிந்தார்.இவரது மகன் சாமுவேல், 20. இவர் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம், இருவரும் மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியிலுள்ள சர்ச்சிற்கு 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் சென்றனர்.சாமுவேல் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்ல, பின்னால் ராபர்ட் அமர்ந்திருந்தார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையின் நொளம்பூர் அணுகு சாலையில், அடையாளம்பட்டு அருகே சென்றபோது, பின்னால் மாக வந்த கழிவுநீர் லாரி, ஸ்கூட்டரில் மோதியது.இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த தந்தை, மகன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோயம்பேடு போக்குவரத்து போலீசார், உடல்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்துக்கு காரணமான, கழிவுநீர் லாரி ஓட்டுனர் மயிலாடுதுறையைச் சேர்ந்த மாரியப்பன், 30, கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டு
சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கழிவுநீர் லாரிகளில் எடுத்து வரப்படும் கழிவுநீர், நொளம்பூர் அணுகு சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக விடப்படுகிறது.இதற்காக, அணுகு சாலையில் அதிவேகத்தில் கழிவுநீர் லாரிகள் இயக்கப்படுவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர். இனி, இதுபோன்ற உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.