| ADDED : ஜன 12, 2024 09:43 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சியில் அமைந்துள்ளது கூடல்வாடி பட்டரை ஏரி. 35 ஏக்கரில் அமைந்த இந்த ஏரி நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த ஏரியில், 2024 - --25ம் ஆண்டுக்கான ஏரி மீன்பாசி குத்தகை ஏலம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் காதம்பரி தலைமையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஏலம் கேட்க அதே கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் வரவோலை வாயிலாக பணம் செலுத்தி இருந்தனர். காலை, 11:00 மணிக்கு ஏலம் துவங்கியது. அப்போது விவசாயிகள் ஏரியை ஏலத்திற்கு விட எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் ஏலம் விடுவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.இதுகுறித்து நீர்வளத்துறை உதவி பொறியாளர் காதம்பரி கூறியதாவது:ஏரி நீரை நம்பி நவரை பருவத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் செய்துள்ளதாக கூறுகின்றனர். விவசாய பணிகளுக்காக ஏரி நீர் இறைப்பு நடைப்பெறும் எனவே அறுவடை முடிந்ததும் ஏலம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தற்காலிகமாக ஏலம் தள்ளி வைத்துள்ளோம். பின் தேதி அறிவித்து ஏலம் விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
3 ஏரிகளில் ஏலம் விட முடிவு
திருத்தணி கோட்ட நீர்வளத்துறையினர் மொத்தம், 79 ஏரிகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம், 'மிக்ஜாம்' புயலால் திருத்தணி வருவாய் கோட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் பலத்த மழையும், ஏழு நாட்கள் துாறல் மழையும் பெய்தது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், 20க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இந்நிலையில், நீர்வளத்துறையினர் மற்றும் ஊராட்சிநிர்வாகம் ஒன்றிணைந்து, மூன்று ஏரிகளில் மீன் ஏலம் விட தீர்மானித்து உள்ளனர். அந்த வகையில் கிருஷ்ணசமுத்திரம், அகூர் மற்றும் அலுமேலுமங்காபுரம் ஆகிய மூன்று ஏரிகளில் மீன் ஏலம், வரும், 22 ம் தேதி முதல், 24ம் தேதி வரை நடக்கிறது.இந்த மீன் ஏலத்தில் அந்தந்த கிராமத்தினர் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஏலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது கிராம பொது இடத்தில் நடைபெறும்.