உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கேட்டு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கேட்டு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கேட்டு, கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி பகுதியில், 20க்கும் மேற்பட்ட கழிவுநீர் சேகரிக்கும் டேங்கர் லாரிகள் உள்ளன. சேகரிக்கும் கழிவுநீரை, திருமழிசையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல ஒரு லாரிக்கு, 15,000 ரூபாய் வரை செலவாகிறது. அதை வழங்க மக்கள் தயங்குகின்றனர். மேலும், நேர விரயம் ஏற்படுவதால், கும்மிடிப்பூண்டியில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கழிவுநீர் கலந்து, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், கழிவுநீர் டேங்கர் லாரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கடந்த வாரம், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றிய லாரி ஒன்றை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து, சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது. லாரி உரிமையாளர், ஓட்டுநர், கிளீனர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை அரசு எடுக்கும் வரை, வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக, கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். நேற்று மாலை, அனைத்து டேங்கர் லாரிகளும், கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ