திருவள்ளூர்:கடம்பத்துார் இந்தியன் வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, கடம்பத்துாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்ரீதர், திருவள்ளூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர் வட்டம், கடம்பத்துார் இந்தியன் வங்கி கிளையில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 5,000த்திற்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கு துவக்கி பயன்பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், வங்கி கணக்கு புத்தகத்துடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என, அறிவிப்பு செய்தனர். அதன்படி, வங்கி கணக்கு புத்தகத்தில் ஆதார் இணைக்க உரிய படிவம் அளிக்கப்பட்டும், இதுவரை வாடிக்கையாளர்களுக்கு முறையாக ஆதார் இணைக்கப்படாமல் உள்ளது.இதனால் அவசர தேவைக்காக, வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,மல் பணம் எடுக்க முடியாத சூழல் உள்ளது. இதையடுத்து, வங்கியில் நேரில் சென்று பணம் எடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும், வங்கி குறுகிய இடத்தில் இயங்கி வருவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வயதானோர், பெண்கள் நிற்க முடியாமல், உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, வங்கி ஊழியர்கள், உரிய காலத்திற்குள் வங்கி கணக்குடன், ஆதார் எண் இணைத்து, வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பணம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.