| ADDED : பிப் 05, 2024 11:19 PM
பொன்னேரி: கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மழையின்போது, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்தன. கரை உடைப்பு வழியாக வெளியேறிய ஆற்றுநீர், பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் - மீஞ்சூர் நெடுஞ்சாலையை மூழ்கடித்து பயணித்தது. அப்போது, சாலை ஆங்காங்கே அரித்து செல்லப்பட்டன.இதனால் சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகின. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், மேற்கண்ட சாலையை சீரமைப்பதில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் காட்டி வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள், அரித்து செல்லப்பட்ட இடங்களில் தடுமாறுகின்றனர். மாற்று திசையில் செல்லும்போது எதிரில் வரும் வாகனங்கள் நிலை தடுமாறுகின்றன.அப்பகுதியில் எந்தவொரு எச்சரிக்கையும் செய்யப்படாமல் இருக்கிறது. மேலும் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் பெயர்ந்து சேதம் அடைந்து கிடக்கின்றன. சாலை சீரமைப்பில் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டுவதால், வாகனங்கள் பெரும் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, மழைநீரில் அரித்து செல்லப்பட்ட மேற்கண்ட சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.