பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு நகரில் மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று, மேலும் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர்கள், மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும், 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, வயிற்றுப்போக்கால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பிரியா, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குழாய் வாயிலாக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது, டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டில் மூன்று இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும், வீடு வீடாக மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதில், பாதிப்பு அறிகுறி இருந்தால், அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை காவு வாங்க துடிக்கிறதா தமிழக அரசு? தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரால், 40க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதே பள்ளிப்பட்டில், கடந்தாண்டு கழிவுநீர் கலந்த குடிநீரால், ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 10 பேர் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, அதேபோன்ற சம்பவம் தலைதுாக்கி இருப்பது, அரசின் நிர்வாக தோல்வியை தெளிவாக வெளிப்படுத்துகிறது. கடந்தாண்டு, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், சில மாதங்களுக்கு முன் திருச்சி உறையூர் என, மாவட்ட வித்தியாசமின்றி, தமிழகத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு தொடர்கிறது. அப்பாவி உயிர்கள் பலியாகி வரும் நிலையில், 'சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி, தமிழக மக்களை, தி.மு.க., அரசு காவு வாங்க துடிக்கிறதா?' என்ற சந்தேகம் எழுகிறது. சுகாதாரமான குடிநீரை கூட வழங்க இயலாத, நிர்வாக திறனற்ற ஆட்சியை நடத்தி கொண்டு, 'நாடு போற்றும் நல்லாட்சி' என, வெற்று பெருமை பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.