உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிளாம்பாக்கத்திற்கு முழுமையாக மாறிய ஆம்னி பஸ்கள் இணைப்பு பஸ் கிடைக்காமல் பயணியர் அவதி

கிளாம்பாக்கத்திற்கு முழுமையாக மாறிய ஆம்னி பஸ்கள் இணைப்பு பஸ் கிடைக்காமல் பயணியர் அவதி

சென்னை:தென் மாவட்டங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள், நேற்று அதிகாலை முதல் கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்டன. அங்கு, இடப்பற்றாக்குறை நீடிப்பதால், பேருந்துகளை நிறுத்த முடியாமல் அவதிப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அங்கிருந்து நகர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தினமும் 1,000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று முன் தினம் இரவு 7:00 மணி முதல், சென்னை கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆம்னி பேருந்துகளில் பயணியரை ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் தடை உத்தரவு அமலானது.இந்த மற்றம் குறித்து, முன் பதிவு செய்தவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் நேற்று முன் தினம் மாலையில் இருந்து நள்ளிரவு வரை, பெரும் குழப்பம் நீடித்தது. கோயம்பேடு வந்த பயணியர், கிளாம்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முதல் முழுமையாக இயக்கப்பட்டன. நேற்று காலை, தென் மாவட்டங்களில் இருந்து, 330 ஆம்னி பேருந்துகள் வந்து, பயணியரை இறக்கி சென்றன. நேற்று மாலை, 440 ஆம்னி பேருந்துகள், இங்கிருந்து பயணியரை ஏற்றி, தென் மாவட்ட நகரங்களுக்கு புறப்பட்டு சென்றன. நேற்று மாலை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், கிளாம்பாக்கம் முனையத்தில் பயணியருக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.அப்போது, ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள் சிலர் அமைச்சரை வழிமறித்து, போதிய உணவகங்கள், குடிநீர் வசதி இல்லை என்று முறையிட்டனர். முன்னதாக, நேற்று காலை கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட ஆம்னி பேருந்து பயணியர், அங்கிருந்து சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கு செல்ல போதிய இணைப்பு பேருந்துகள் இல்லாததால் சிரமப்பட்டனர். பயணியர் சிலர் கூறியதாவது:மாநகரின் பல்வேறு இடங்களுக்கு போதிய அளவில் நேரடி இணைப்பு பேருந்து வசதி இல்லை. மாறி மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அருகில், மின்சார ரயில் நிலைய வசதியும் இல்லை. கிளாம்பாக்கத்தில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்ல, ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. கால்டாக்சி, ஆட்டோக்களில் 600 முதல் 1,000 ரூபாய் வரை செலவு ஆகிறது.கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம், மெட்ரோ ரயில் சேவை இணைப்பு வரும் வரையில், கோயம்பேடு வரை 50 சதவீத ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இட நெருக்கடி

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:சென்னையில் இருந்து தினமும் 800க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஆனால், கிளாம்பாக்கம் நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகளை தான் நிறுத்த முடிகிறது. கடும் இடநெருக்கடி ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல், கிளாம்பாக்கத்தில் பயணியரை இறக்கிவிட்டு, பூந்தமல்லி, மாதவரம், வானகரம் போன்ற இடங்களுக்கு ஆம்னி பேருந்துகளை கொண்டு சென்று நிறுத்துகிறோம். இதனால் 50 கி.மீ., துாரம், பேருந்துகளை காலியாகவே இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.ஆம்னி பேருந்துகளை நிறுத்தி இயக்கவும், பயணியர் சிரமம் இன்றி வந்து செல்லவும், கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகளை செய்து தர வேண்டும். பேச்சு நடத்த, அமைச்சர்கள் அழைத்தனர். அடுத்த சில மணி நேரத்தில் திடீரென ரத்து செய்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

'ஒன் டூ ஒன்' பேருந்து வசதி

அதிகாரிகள் கூறியதாவது:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, பயணியர் வசதிக்காக 1,400 ப்ரீபெய்டு ஆட்டோக்களும், 500 கால் டாக்ஸி வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கத்திற்கு 'ஒன் டூ ஒன்' பேருந்து, ஐந்து நிமிடத்திற்கு ஒரு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு, மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் பேருந்துகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோயம்பேடில் கடைகள் மூடல்

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தனியார் பேருந்து நிறுவனங்களின் முன்பதிவு அலுவலகங்களை மூட, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது. இந்த வளாகத்தை காலி செய்ய, ஜன., 30 வரை கெடு விதித்துள்ளது.முன்பதிவு அலுவலகங்கள் மட்டுமல்லாது, ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் காலி செய்ய, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 'நோட்டீஸ்' அளித்துள்ளனர். இதன் காரணமாக அந்த வளாகம் நேற்று, வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை