திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து, சுத்திகரிக்காமல் 62 லட்சம் லிட்டர் கழிவுநீர் புட்லுார் ஏரியில் கலப்பது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஏரியில் விடுவதை தடுக்கவும், சுத்திகரிப்பு மையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், நகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர் நகராட்சியில், கடந்த 2008ல் 55 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கிய பாதாள சாக்கடை திட்ட பணி, 2013ம் ஆண்டு நிறைவடைந்த பின், தற்போது செயல்பாட்டில் உள்ளது. இங்கு, 90 கி.மீ.,க்கு குழாய் பதிக்கப்பட்டு, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நான்கு இடங்களில் சேகரிக்கப்படுகிறது.
எச்சரிக்கை
அதன்பின், தேவி மீனாட்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், ஆரம்பத்தில் தொழிற்சாலைகள் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாக இருந்ததால், புட்லுார் ஏரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள இயந்திரம் பழுதானதால், சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் தொட்டி நிரம்பி, புட்லுார் ஏரியில் வெளியேறி வருகிறது. இதனால், புட்லுார் ஏரி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், புட்லுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணி - நீர்வளத்துறையில் முறையிட்டது. அதன்பின், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து தினமும், 62 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஏரியில் கலந்தால், ஏரி விரைவில் நிரம்பி விடும் எனக் கூறி, நீர்வளத்துறை அனுமதி மறுத்தது. கடந்த 2018ல் சுத்திகரிக்கப்பட்ட நீரை, 750 மீ.,க்கு குழாய் அமைத்து, அங்கிருந்து கால்வாய் வழியாக கூவம் ஆற்றுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது சுத்திகரிக்கப்படாமல், கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், ஆற்று நீர் நிறம் மாறி வருகிறது. மேலும், இந்த கழிவுநீர், புட்லுார் தடுப்பணையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதையடுத்து, புட்லுார் சமூக ஆர்வலர்கள், திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தனர். அதன்படி, கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்தனர். அப்போது, சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் புட்லுார் ஏரி மற்றும் கூவம் ஆற்றில் கலப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சுத்தி கரிக்கப்படாத கழிவு நீரை ஏரி மற்றும் ஆற்றில் வெளியேற்ற கூடாது. சுத்திகரிப்பு மையத்தில் உள்ள பிரச்னையை சரிசெய்து, உடனே தீர்வு காண வேண்டும் என, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, புட்லுார் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறியதாவது: திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சமூக ஆர்வலர்களுடன் பார்வையிட்டோம். அதில், சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல், கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி நிரம்பி வழிந்து, புட்லுார் ஏரியில் கலந்து, பின் கூவம் ஆற்றில் கலக்கிறது.
போராட்டம்
இந்த கழிவுநீர், கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புட்லுார் தடுப்பணையில் தேங்கியுள்ளது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளது. இதை தடுக்கும் வகையில், கூவம் - புட்லுார் ஏரி மீட்பு குழு உருவாக்கி உள்ளோம். இந்த குழு சார்பில், விரைவில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாட உள்ளோம். மேலும், மக்களுடன் இணைந்து, நகராட்சி அலுவலகம் முன், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நவீன சுத்திகரிப்பு மையம்
அமைக்கும் பணி முடிந்தால் தீர்வு
திருவள்ளூர் நகராட்சி அலுவலர் கூறிய தாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு அருகே, புதிதாக கழிவுநீரை குடிநீராக மாற்றி, கூவம் ஆற்றில் விடும் வகையில் 10.48 கோடி ரூபாயில் நவீன சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, மழை காரணமாக, பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை முடிந்ததும், மீண்டும் கட்டுமான பணி தொடர, ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி உள்ளோம். பணி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தால், கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின் நன்னீராக மாற்றப்படும். அதன்பின், ஏரி நீரும் மாசடையாது. இவ்வாறு அவர் கூறினார்.