| ADDED : நவ 22, 2025 02:11 AM
பொன்னேரி: தேவதானம் சாலையில், ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு, அவற்றில் மழைநீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கிராமத்தில் இருந்து, தேவதானம் செல்லும் சாலையின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் மழைநீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் வலது, இடது என, மாறி மாறி தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். கார், வேன் உள்ளிட்டவை சாலை பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. ஒரு சில இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். இரவு நேர பயணங்களின்போது, கூடுதல் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இச்சாலை வழியாக தேவதானம், காணியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பொன்னேரி நகரத்திற்கு சென்று வருகின்றனர். எனவே, சாலை பள்ளங்களை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.