| ADDED : டிச 08, 2025 06:23 AM
திருத்தணி: திருத்தணி கோட்ட நீர்வளத்துறையில், ஒரே ஒரு உதவி பொறியாளர் பணிபுரிவதால் ஏரிகள் பராமரிப்பு பணி, புதிய தடுப்பணை கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. திருத்தணி வருவாய் கோட்டத்தில், நீர்வளத்துறையினர் மொத்தம், 79 ஏரிகளை பராமரித்து வருகின்றனர். மேலும், நந்தியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள் கட்டியும் தண்ணீர் சேமித்து, ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை, விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த வழிவகை செய்கின்றனர். திருத்தணி நீர்வளத்துறை அலுவலகத்தில் ஒரு உதவி செயற்பொறியாளர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களுக்கு தலா ஒரு உதவி பொறியாளர் வீதம் பணியாற்ற வேண்டும். தற்போது, உதவி செயற்பொறியாளர், பள்ளிப்பட்டு ஒன்றிய ஒரு உதவி பொறியாளர் ஆகிய இருவர் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். திருத்தணி ஒன்றிய உதவி பொறியாளர் பணியிடம் ஒன்றரை ஆண்டுக்கு மேல் காலியாக உள்ளன. ஆர்.கே.பேட்டை உதவி பொறியாளர், பூண்டி நீர்தேக்கத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டதால், அங்கே சென்று விடுகிறார். இதனால் மூன்று ஒன்றியங்களில் உள்ள, 79 ஏரிகளை பராமரிப்பு பணிகள், தடுப்பணைகள் ஏற்படுத்துவது உட்பட்ட அனைத்து பணிகளும் ஒரே ஒரு உதவி பொறியாளர் செய்ய வேண்டியுள்ளன. இதனால், ஏரி, தடுப்பணை பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் புதைந்தும், ஆக்கிரமிப்பில் உள்ளதால் பருவமழை தண்ணீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன. எனவே கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து உதவி பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.