திருவள்ளூர் : நடப்பு சம்பா பருவத்தில், கோ (ஆர்) 50 நெல் சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் பெற்று பயனடையலாம் என, வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் தேவநாதன் மற்றும் பயிர் மரபியல் துறை உதவிப் பேராசிரியர் அர.மணிமாறன் கூறும் போது, ''திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் வழக்கமாக ஏ.டீ.டி., 39 மற்றும் பி.பி.டி., 5204 ஆகிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த ரகங்களில், பி.பி.டி., 5204 பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நடுத்தர சன்ன ரகமான கோ (ஆர்) 50 நெல் ரகம், நல்ல அரவைத் திறனும், மிதமான அமைலோஸ் மாவுப் பொருள் உடையதால் சமைப்பதற்கும், இட்லி தயாரிப்பதற்கும் ஏற்றது. மேலும், குலை நோய், இலை உறை அழுகல் நோய், பழுப்புப் புள்ளி நோய், பாக்டீரியா இலைக் கருகல் நோய் மற்றும் துங்ரோ நோய் ஆகியவற்றிற்கு, மிதமான எதிர்ப்புத் திறன் கொண் டது. இதன் வயது 130 - 135 நாட்கள் ஆகும். சராசரி நெல் மகசூல் திறன் எக்டேருக்கு, 6,300 கிலோ. எனவே, நடப்பு சம்பா பருவத்தில் உழவர் பெருமக்கள் கோ (ஆர்) 50 நெல் சாகுபடி செய்து, கூடுதல் மகசூல் பெற்று பயனடையலாம்,'' என்று தெரிவித்தனர்.