| ADDED : செப் 08, 2011 12:00 AM
பொன்னேரி : பைக்கில் சென்ற அடகுக் கடைக்காரர்களை உருட்டுக் கட்டையால் தாக்கி, அவர்களிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்து தப்பிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பொன்னேரி அடுத்த, திருவாயற்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூசாராம், 45, அவரது உறவினர் மிட்டாலால்ஜி, 34. இருவரும் பழவேற்காடு பகுதியில் அடகுக்கடை வைத்து தொழில் செய்து வருகின்றனர்..நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிக் கொண்டு பூசாராம் தனது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். மிட்டாலால்ஜியும் அவருடன் பைக்கில் சென்றார்.பழவேற்காடு அடுத்த, ஆண்டார்மடம் அருகே பைக் சென்றபோது, பின்னால் வந்த மர்ம நபர்கள் இருவர், பூசாராமின் பைக்கை வழி மடக்கினர். மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் இருவரையும் தாக்கினர்.இதில் இருவரும் பலத்த காயமடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். மர்ம நபர்கள் வண்டியின் டேங்க் கவரில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். அதில் எட்டு சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. கொள்ளையடிக்கப்பட்டவற்றின் மொத்த மதிப்பு மூன்று லட்சம் ரூபாய் ஆகும்.அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை '108' ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து, திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.