| ADDED : நவ 16, 2025 02:36 AM
பழவேற்காடு: குடிநீர் வினியோகம் செய்யும் டிராக்டரில் சிக்கி, 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழவேற்காடு மீனவ கிராம பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால், வெளியிடங்களில் இருந்து டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, பழவேற்காடு செஞ்சியம்மன் நகரில், டிராக்டரில் கொண்டு வரப்பட்ட குடிநீரை, பகுதிமக்கள் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, ரமேஷ் - சத்யா தம்பதி, தண்ணீர் பிடிக்க வந்தனர். உடன் வந்த 2 வயது பெண் குழந்தை விஜித்தா, டிராக்டருடன் இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்கரின் கீழ் விளையாடி கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் அனைவரும் தண்ணீர் பிடித்த பின், ஓட்டுநர் டிராக்டரை இயக்கினார். அப்போது, டேங்கரின் கீழ் விளையாடி கொண்டிருந்த குழந்தை விஜித்தா, பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தது. அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, பழவேற்காடைச் சேர்ந்த ஓட்டுநர் தேவன், 53, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.