ஆவடி: சென்னையை அடுத்த திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தில் நேற்று, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், துணை முதல்வர் உதயநிதி, 333 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட, 377 கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், 137 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, 211 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, 1.12 லட்சம் பயனாளிகளுக்கு, பட்டா, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இலவச வீடுகள், திருமணம், கல்வி உதவித்தொகை, ஸ்கூட்டர் என, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: நாட்டில் நீர்நிலையில் தன்னிறைவு பெற்ற ஒரு ஊராட்சியாக, திருவள்ளூர் மாவட்டம், பாலாபுரம் ஊராட்சி, மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த நிகழ்வில், 37,000 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளோம். ஒவ்வொரு மாதமும், 1.15 கோடி மகளிருக்கு மாதம் 1,000 வழங்கப்படுகிறது. விடுபட்டோருக்கும் டிச., 15 முதல், மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். இவ்வாறு பேசினார். விழாவில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், அமைச்சர் நாசர், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், சசிகாந்த் செந்தில், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆவடியில் 24 நிமிடம்
போக்குவரத்து தடை
ஆவடி பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் வெண்கல சிலையை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். அவர் வருகைக்காக ஆவடி பேருந்து நிலையம் அருகே, சி.டி.எச்., சாலையில் தடுப்பு போட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், வேலை மற்றும் பல்வேறு தேவைகளுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இருந்தவர்கள், 24 நிமிடங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. போலீசார் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் காக்க வைத்தது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சுகாதார நிலையம் திறப்பு
பாலவேடு ஊராட்சி, மேலப்பேடு பகுதி யில் முன்னாள் முதல்வர் காமராஜர், 1955ல் அரசு மருத்துவமனை திறந்து வைத்தார். முறையான பராமரிப்பின்றி, ஐந்து ஆண்டுகளாக சுகாதார நிலையம் பாழடைந்து கிடந்தது. இதனால், சுற்றுவட்டார மக்கள் சிகிச்சைக்காக, 20 கி.மீ., துாரம் பேருந்தில் பயணித்து, கதவூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று வந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, 15வது மத்திய நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ், 45 லட்சம் ரூபாயில், துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அதை, உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.