| ADDED : பிப் 03, 2024 11:31 PM
சோளிங்கர்: சோளிங்கரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கரிக்கல் குமரகிரி மலைக்கோவில். இந்த கோவிலில் முருக பெருமான் அருள்பாலித்து வருகிறார். சோளிங்கர், நரசிங்கபுரம், குருவராஜபேட்டை, மின்னல், சாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். கிருத்திகை மற்றும் நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன. மலைக்கு படி வழி உள்ளது. வாகனங்கள் செல்வதற்கான பாதை இன்னும் முழுமை அடையவில்லை. மலை உச்சியில் உள்ள சமதளத்தில், விஸ்தீரணமான பரப்பில் கோவில் அமைந்துள்ளது. மலை மீது, தென்னை, நாவல், வேம்பு உள்ளிட்டவற்றுடன் ஆலமரமும் பரந்து விரிந்து வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் வளர்ந்துள்ள சூழல், இது மலைக்கோவில் என்ற நிலையை மாற்றி நிலப்பரப்பில் உள்ள கோவில் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது சிறப்பு. இந்த தலத்தில் திருமணங்களும் நடத்தப்படுகின்றன. மலையடிவாரத்தில், படி வழியை ஒட்டி, கடந்த 2000ம் ஆண்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடமும் உள்ளது. திருமண நிகழ்ச்சிகளின் போது இந்த சமுதாயக்கூடம் பயன்படுத்திக்கொள்ளப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த சமுதாயக்கூடம் புதர் மண்டி கிடக்கிறது. புதரை அகற்றி, சமுதாயக்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.