| ADDED : டிச 08, 2025 06:22 AM
பொன்னேரி: லட்சுமிரம் அணைக்கட்டு பகுதிகளில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு இளைஞர்கள் மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதால், அசம்பாவிதங்கள் நேரிடும் அபாயம் உள்ளது. கனமழையின் காரணமாக, ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்று நீர் இரு கரைகளை தொட்டு, பயணிக்கிறது. ஆற்று கரையோர கிராமங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொன்னேரி அடுத்த லட்சுமிபுரத்தில், ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து, விநாடிக்கு, 6000 கனஅடி உபரிநீர் வெளியேறி, பழவேற்காடு கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. அணைக்கட்டில் இருந்து உபரிநீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில், இளைஞர்கள் கூட்டமாக நின்று மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, அங்குள்ள ஷட்டர் பகுதிகளிலும், கான்கிரீட் கட்டுமானங்களின் அருகே நின்றும் மீன் பிடித்து கொண்டிருக்கின்றனர். சிறிது கால் இடறினாலும், அவர்கள் அணைக்கட்டில் தவறி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் அசம்பாவிதங்கள் நேரிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க அணைக்கட்டு பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், கண்காணிக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.