உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கமிஷனரை மிரட்டிய கோவில்பட்டி நகராட்சி தலைவர் ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் அத்துமீறல்

கமிஷனரை மிரட்டிய கோவில்பட்டி நகராட்சி தலைவர் ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் அத்துமீறல்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி சாலைகளில், நடைபாதைகளை மறித்து அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில், பேச்சு நடந்தது. மே 9ம் தேதி ஆக்கிர மிப்புகள் அகற்றப்படும் என, அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இந்நிலையில், கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பறை முன் பகுதியில், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, திடீரென ஒரு கடை திறக்கப்பட்டது. இதையடுத்து, கோட்டாட்சியர் உத்தரவை மதிக்காமல், நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக கூறி, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் நகராட்சி கமிஷனர் கமலாவை சந்தித்தனர்.

தர்ணா

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, ஆக்கிரமிப்பை எடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். இதனால், நகராட்சி கமிஷனர் முன் தரையில் அமர்ந்து கூட்டமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, திடீரென நகராட்சி தலைவரும், தி.மு.க., நகர செயலருமான கருணாநிதி, இந்திய கம்யூ., நகர செயலரும், கவுன்சிலருமான சரோஜா மற்றும் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளவர்கள் நகராட்சி கமிஷனர் அறைக்குள் நுழைந்தனர்.அறையின் வெளியே சாலையோர கடைக்காரர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கமிஷனர் கமலாவிடம் நேராக சென்ற நகராட்சி தலைவர் கருணாநிதி ஆவேசமாக பேசினார்.'ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பணியில் இடையூறு செய்ததாக போலீசில் புகார் கொடுங்கள்' என உத்தரவிட்டார்.

பரபரப்பு

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், 'நீங்கள் தான் ஊரை காப்பாற்றப் போகிறீர்களா... மனு கொடுத்தால் கொடுத்துவிட்டு போகணும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, எப்படி கடைகளை அகற்ற முடிவு செய்தனர். கடைகள் அங்கேயே தான் இருக்கும்' என ஆவேசமாக மிரட்டும் வகையில் பேசினார்.கருணாநிதி ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார், இரு தரப்பினரிடமும் புகார் மனுக்களைப் பெற்று, அவர்களை அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் போராட்டம் நீடித்ததால், நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கூறும் நகராட்சி தலைவர் கருணாநிதி, எந்த அடிப்படையில், நகராட்சி கமிஷனரை மிரட்டினார் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இதற்கிடையே, மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவின் படி, நகராட்சி கழிப்பறை முன் திடீரென அமைக்கப்பட்ட கடை அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை