உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம் துாத்துக்குடி மாவட்ட மக்கள் ஏமாற்றம்

 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம் துாத்துக்குடி மாவட்ட மக்கள் ஏமாற்றம்

துாத்துக்குடி: 'மல்டி ஸ்பெஷாலிட்டி' என்ற பெயரில் கட்டப்பட்ட மருத்துவமனையை, தற்போது மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதால், துாத்துக்குடி மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையும், காமராஜ் நகரில் அரசு மருத்துவ கல்லுாரியும் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில், 1,200 உள்நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளன. 1,000க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 136 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு அதிநவீன வசதிகளுடன், காமராஜ் நகரில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஏழு மாடிகளுடன் கூடிய கட்டடத்தில், 687 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 95 சதவீத பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, தற்போது மகப்பேறு, குழந்தைகள் நலனுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை என மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமானால், 65 பணியிடங்களை புதிதாக நிரப்ப வேண்டியுள்ளது. அவ்வாறு நிரப்பும் பட்சத்தில் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பதால், அதை தவிர்க்கவே மகப்பேறு, குழந்தைகள் பிரிவு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என சுகாதாரத்துறை அதிகாரிகள் மடைமாற்றம் செய்துள்ளனர். இதனால், துாத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சை வசதிகளை, சுகாதாரத்துறை திட்டமிட்டே தடுத்துள்ளது. நவீன சிகிச்சைகளுக்கு, திருநெல்வேலி, மதுரையை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதாலேயே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள மருத்துவமனையில், மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது, இந்த மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இது மக்களை அலைக்கழிக்கும் செயல். மக்கள் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை