| ADDED : ஆக 14, 2011 03:17 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு முன்னேற்றப்பாடு பணிகள் நடந்து வருவதை நேற்று சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அலுவலக கூடுதல் இயக்குநர் பிச்சை அதிரடி ஆய்வு செய்தார். பக்கிள் ஓடை பணிகளை டிசம்பர் இறுதிக்குள் கட்டாயம் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.தமிழகத்தில் மழைக்காலத்தில் ஊருக்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். மழைநீர் வடிகால் முறையாக பராமரிக்க வேண்டும். மழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் முழுமையாக சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெ.,அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சிகளில் இது சம்பந்தமான பணிகள் முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ள சென்னை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது போன்ற பணிகளை ஆய்வு செய்ய சென்னை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தமட்டில் கடந்த மழை காலத்தில் தண்ணீர் தேங்கி பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வரும் மழைக்காலத்தில் மழையால் மக்களுக்கு சிறிதளவு பாதிப்பு கூட ஏற்படாத வகையில் முன் கூட்டியே எல்லா பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்ஜினியர் ராஜகோபாலன் மற்றும் அதிகாரிகள் குழு தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் என்ன நிலையில் நடக்கிறது, ஏற்கனவே நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய நேற்று சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அலுவலக கூடுதல் இயக்குநர் பிச்சை தூத்துக்குடி வந்தார். மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி பகுதியில் 1.1 கிலோ மீட்டர் தூரத்தில் 4 கோடியே 30 லட்ச ரூபாய் செலவில் நடந்து வரும் பக்கிள் ஓடை மூன்றாம் கட்ட பணிகளை ஆய்வு செய்தார். அங்கு வேகமாக பணிகள் நடந்து கொண்டிருந்ததை பார்வையிட்டார். கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இன்ஜினியர் ராஜகோபாலன் ஆகியோர் பணிகள் குறித்து கூடுதல் இயக்குநரிடம் விளக்கினர். இந்த பணிகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டாயம் முடித்து விட வேண்டும். இதில் தாமதம் எதுவும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் 51வது வார்டு சின்னமணிநகர் பூங்காவில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அபிவிருத்தி பணிகள் செய்யப்பட்டு பூங்கா மெருகேற்றப்பட்டுள்ளது.அதனை கூடுதல் இயக்குநர் பார்த்தார். பணிகள் நல்ல முறையில் நடந்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் இதே நிலையில் மக்கள் பொழுது போக்குவதற்கு ஏற்ற வகையில் சீரமைப்பு செய்ய ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்தார்.இதனை தொடர்ந்து மாநகராட்சி ஜார்ஜ்ரோடு, சந்தை ரோடு பகுதிகளில் ரோட்டின் ஓரங்களில் மழைநீர் செல்வதற்கு கட்டப்பட்டு வரும் வாறுகால் பணிகள் நடப்பதை ஆய்வு செய்தார். கூடுதல் இயக்குநர் ஆய்வில் மாநகராட்சி கமிஷனர், இன்ஜினியர் கலந்து கொண்டனர். தல ஆய்வுக்கு பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் பணிகள் குறித்து கூடுதல் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை புறப்பட்டு சென்றதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.