திருப்பூர் : ''ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆனந்தன் கூறினார்.திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆனந்தன், தொகுதிக்கு உட்பட்ட நான்கு கிராமங்களில் நேற்று குறைகேட்பு கூட்டம் நடத்தி னர். வள்ளிபுரம் பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்க உள்ள பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்து, நான்கு பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து தொரவலூர், சொக்கனூர், பட்டாம்பாளையம், மேற்குப்பகுதி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, 'இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. முதியோர் உதவித்தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்; சில பகுதிகளில் ரோடு போடாமல் உள்ளனர். கூடுதலாக மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். கூடுதலாக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்,' என்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக வழங்கினர். மொத்தம் 610 மனுக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலானவை வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை சம்பந்தப்பட்டவையாக இருந்தன. மனுக்களை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., ஆனந்தன், ''பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஊராட்சிகளில் உள்ள குடிநீர் பிரச்னை, தமிழக முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக்கழகம், 2001ல் எவ்வளவு குடிநீர் வழங்கியதோ, அதே அளவு குடிநீரை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ஆனால், விலை கூடுதலாக கேட்கின்றனர். முன்பு ரூ.3.50க்கு வழங்கினர். ''மாநகராட்சிக்கு 5.00 ரூபாய்க்கு வழங்குகின்றனர். தற்போது, அதைவிட அதிகமான தொகை கேட்கின்றனர். அதன் காரணமாகவே, தண்ணீர் பெற்று தருவதில் தாமதம் நீடிக்கிறது. ''ஐந்து ஊராட்சிகளில் கடந்த ஆட்சியில் எவ்வளவு லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது; தற்போதுள்ள மக்கள் தொகை எவ்வளவு; அதற்கேற்ப, எவ்வளவு லிட்டர் தேவை என்பது தொடர்பாக அனைத்து தரப்பு அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தி, விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.