திருப்பூர்:உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, மண்டல அலுவலர்கள் நியமிக்க பட்டியல் தயாராகி வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் 265 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது; அடுத்த மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் இதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது; ஓட்டுச் சாவடிகள் அமைவிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.மாவட்ட அளவில் ஏறத்தாழ 14.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தலில் ஓட்டுப் போட உள்ளனர். ஊராட்சிகளில் மொத்தம் 1,572 ஓட்டுச் சாவடிகளும், பேரூராட்சிகளில் 253 ஓட்டுச்சாவடிகளும், மூன்றாம் நிலை நகராட்சி களில் 61 மற்றும் நகராட்சிகளில் 123 ஓட்டுச்சாவடிகளும், மாநகராட்சியில் 425 ஓட்டுச்சாவடிகளும் அமைய உள்ளன. அவ்வகையில் மொத்தம் 2,434 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
ஊராட்சிகள்:உள்ளாட்சி தேர்தலில் குறைந்த பட்சம் 400 வாக்காளர்களும் அதிகபட்சமாக 1,500 வாக்காளர்களும் உள்ள வகையில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; ஊராட்சி மற்றும் ஒன்றியத்தில் 400 வாக்காளர் வரை உள்ள ஓட்டுச் சாவடிகள் மொத்தம் 501 அமைக்கப்பட்டுள்ளன; 400 முதல் 600 வாக்காளர் வரையில் 761 ஓட்டுச் சாவடிகள், 600 முதல் 800 வாக்காளர் வரை 260 மற்றும் 800க்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள வகையில் 50 ஓட்டுச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சிகள்:பேரூராட்சிகளில் 600 வாக்காளர் வரை 134 ஓட்டுச்சாவடிகள், 600 முதல் 800 வாக்காளர் வரை 76 ஓட்டுச்சாவடிகள், 800 முதல் ஆயிரம் வாக்காளர் வரை 31 சாவடிகளும், ஆயிரம் முதல் 1,200 வரையிலான வாக்காளர் உள்ள 10 ஓட்டுச்சாவடிகள் மற்றும் 1,200க்கு மேல் 2 ஓட்டுச்சாவடிகளும் உள்ளன.
நகராட்சிகள்:மொத்தம் உள்ள 5 நகராட்சி மற்றும் ஒரு மாநகராட்சியில், 21 ஓட்டுச் சாவடிகள் 600 பேர் வரையிலும், 156 ஓட்டுச் சாவடிகள் 600 முதல் 800 பேர் வரையிலும், 800 முதல் ஆயிரம் பேர் வரை 182 ஓட்டுச் சாவடிகளும், ஆயிரம் முதல் 1,200 பேர் 236 மற்றும் 1,200 பேருக்கு மேல் ஓட்டுப் போடும் வகையில் 13 ஓட்டுச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஓட்டுச் சாவடிகளில் பணியாற்ற, ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஓட்டுப் பதிவு அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது; ஓட்டுச் சாவடிகள் அமைக்க தேவையான ஏற்பாடு செய்தல், உரிய ஓட்டுப் பதிவு பொருட்கள் கொண்டு சேர்த்தல், ஓட்டுப்பதிவுக்குப் பின் ஓட்டுப் பதிவு இயந்திரம், ஓட்டுப் பெட்டிகள் மற்றும் ஆவணங்களை எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு சேர்க்கும் பணிக்கு மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் குறைந்த பட்சம் 10 முதல் அதிகபட்சம் 15 ஓட்டுச்சாவடிகளுக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்படுவர். மண்டல அலுவலர்களுக்கு உதவியாக ஒரு அலுவலர்; ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவர். மண்டல அலுவலர் பயணிக்கு ஒரு வாகனம், ஓட்டுப் பதிவு பொருட்கள் கொண்டு செல்ல ஒரு லாரி மற்றும் பாதுகாப்பு போலீசார் அனுப்பப்படுவர்.உள்ளாட்சி அமைப்பு வாரியாக ஏறத்தாழ 140 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மண்டல அலுவலர் பணிக்கு நியமிக்கப்படவுள்ள அலுவலர்களின் பட்டியல் தயார் செய்யும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.