| ADDED : ஆக 01, 2024 01:30 AM
பல்லடம்: பல்லடம்-, மங்கலம் ரோட்டில், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரி ஆகியவை ஒருசேர அமைந்துள்ளன.பழைய அரசு ஆண்கள் பள்ளி கட்டடம் மற்றும் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் ஆகியவற்றில் அரசு கல்லுாரி செயல்பட்டு வருகிறது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டியே அரசு கல்லுாரியும் அமைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி, அரசு கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், சமூக விரோதிகள் சிலர், கல்லுாரி வளாகத்துக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு, எளிதில் வந்து செல்ல வேண்டி, சுற்றுச் சுவரில் ஓட்டை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் தினமும் ஏராளமானோர் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால், சமூக விரோதிகள் நடமாட்டத்தில் இருந்த அரசு பள்ளி மைதானம், தன்னார்வலர்கள் பலரின் முயற்சியுடன் மீட்கப்பட்டது.இருப்பினும், இரவு நேரங்களில், கல்லுாரி வளாகத்துக்குள் நுழைகின்றனர். இதற்காக சுற்றுச்சுவரில் ஏற்படுத்திய ஓட்டை கடந்த சில மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டது. தற்போது, சுற்றுச்சுவரின் வேறு இடத்தில் ஓட்டையை ஏற்படுத்தி உள்ளனர். பள்ளி - கல்லுாரி வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நுழையாத வகையில், சுற்றுச்சுவர், 'சிசிடிவி', செக்யூரிட்டி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி, சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.