திருப்பூர்:அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தால், வறட்சியில் பிடியில் இருந்த பின்தங்கிய கிராமங்கள் செழிப்பாகும் என, விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இ.கம்யூ.,) மாவட்ட செயலாளர் சின்னசாமி:அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை, தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளதை, இனிப்பு வழங்கி கொண்டாடினோம். செங்கப்பள்ளி குளத்துக்கு தண்ணீர் கிடைப்பதை வரவேற்று, மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இத்திட்டத்துக்காக போராடிய விவசாயிகள் அனைவருக்கும், தமிழக முதல்வருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வறட்சியின் பிடியில் இருக்கும் செங்கப்பள்ளி சுற்றுப்பகுதி, இத்திட்டத்தால் மீண்டும் செழிப்பான பகுதியாக மாறும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மா.கம்யூ.,) மாவட்ட செயலாளர் குமார்: கடந்த 2002ல், குன்னத்துாரில் வறட்சி நிவாரண கோரிக்கை மாநாடு நடத்தி, இத்திட்டம் தொடர்பாக கோரிக்கை விடுத்தோம். அவிநாசி -அத்திக்கடவு திட்டத்துக்காக, தொடர்பாடு பாடுபட்டு வந்தோம்; பல்வேறு இயக்கம் நடத்தினோம்.அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தை ஆய்வு செய்ய, தி.மு.க., நிதி ஒதுக்கியது; அடுத்து வந்த அ.தி.மு.க., அரசு நிதி ஒதுக்கி, திட்டத்தை துவக்கி வைத்தது. பல்வேறு இடர்பாடுகளை களைந்து, தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 10 ஒன்றியங்களில், 1,045 குளம், குட்டைகள் பயன்பெறும்.நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படையும். இத்திட்டத்தை தொடர்ந்து, 'எல் அண்ட் டி' நிறுவனம் பராமரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பு செய்யவும், குளம், குட்டைகளில் நிறுவியுள்ள ஓ.எம்.எஸ்., கருவிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முட்புதர் உள்ள குளம், குட்டைகளை துார்வாரி, முழுமையாக தண்ணீர் தேக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.*