திருப்பூர்;நாச்சிபாளையம் அடுத்துள்ள தொட்டிபாளையத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தில், 850 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தாண்டு, மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் பசுமை பயணம் துவங்கியுள்ளது.கோடைமழை கருணை காட்டியதால், அக்னி நட்சத்திர நாளிலேயே மரக்கன்று நடவு துவங்கியுள்ளது. வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை, திருப்பூர், அவிநாசி என, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், முன்பதிவு செய்து, மரக்கன்று நடவு செய்ய ஆர்வமாக காத்திருக்கின்றனர்.ஏற்கனவே, 2 லட்சம் மரக்கன்றுகள் தயாராக இருந்த நிலையில், மழையும் பெய்து வருவதால், மரக்கன்று நடவு முன்கூட்டியே துவங்கிவிட்டது.இந்நிலையில், திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் அடுத்துள்ள தொட்டிபாளையத்தில், சண்முகராஜ் - பாலசவுந்தரிக்கு சொந்தமான ஆசாரிதோட்டத்தில் நேற்று மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.மரக்கன்று வளர்க்கும் ஆர்வத்துடன், 850 தேக்கு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. நிலத்தை காலியாக போட்டு வைக்காமல், பயனுள்ள மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாக, இயற்கையை வளமாக்க முடியும்... நமது பொருளாதாரமும் உயரும் என, பசுமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.கல்லுாரி, பள்ளிகள், தொழிற்சாலைகள் என, காலியாக உள்ள இடங்களில், பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முன்வரலாம் என, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மேலும் விவரங்களுக்கு, 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.