உடுமலை:உடுமலை அருகே, விவசாய ஒருவர் மரத்தின் மீது வீடு கட்டி, இன்றளவும் வசித்து வருவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம், கொழுமம் வனச்சரகம், ஆண்டிபட்டி ராயர்பாளையம் பகுதியில், மரத்தின் மீது, மரத்தினால் வீடு கட்டி, பனை ஓலையால் கூரை, மரக்கட்டைகளால் படிக்கட்டு என, இரு அடுக்கு கொண்ட வீட்டில், விவசாய குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் வசிக்கின்றனர்.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த, கருணாநிதி, சிவக்குமார் உள்ளிட்டோர், கொழுமம் பகுதியிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, மர வீட்டில் வசிக்கும் பெருமாள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர்.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியதாவது:இப்பகுதியிலுள்ள விவசாயிகள், பூர்வகுடிகளாகவும், மானாவாரியாக கொள்ளு, சோளம், மொச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். மலைப்பகுதிகளிலிருந்து, தண்ணீர் குடிக்க வரும் யானைகள், தென்னை மரங்களை மட்டுமே சாய்த்து வருகின்றன. மற்ற மரங்களை சேதப்படுத்துவதில்லை.இருந்தாலும், பாதுகாப்பாக இருப்பதற்காக, உயரமாக வளர்ந்துள்ள வேம்பு மரத்தில், மரக்குச்சிகளை கொண்டு, உறுதியாக வீடு கட்டியுள்ளனர். நிலப்பகுதியில், வீடு இருந்தால், யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் தாக்குதல் அபாயம் உள்ளது. மழை, வெயில் காலங்களிலும், மற்ற வன விலங்குகள் பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கும்.மரத்தின் கிளைகளை ஒதுக்கி, அவற்றை கொண்டே, மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து இறுக்கிக் கட்டி வீடு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக மேலே ஏறி இறங்கும் வகையில், மரக்கட்டைகளில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.கீழ் அடுக்கில், சமையல் அறையும், மேல் அடுக்கில் படுக்கை அறை என இரு அடுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. இதே போல், இப்பகுதியில், மர வீடுகளில் பெரும்பாலானவர்கள் வசித்து வருகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் மரத்தின் மீது மரக்குச்சிகளை கொண்டு வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்வதை பதிவு செய்துள்ளோம்.இவ்வாறு, கூறினர்.