உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் உரங்கள் மானிய விலையில் பெற அழைப்பு

பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் உரங்கள் மானிய விலையில் பெற அழைப்பு

உடுமலை:உடுமலை வட்டாரத்திலுள்ள, வேளாண் விரிவாக்க மையங்களில், பயிர்களுக்கு தேவையான உயிர் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அறிவித்துள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், பயிர் வகைகளும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பயிர்களின் வளர்ச்சிக்கு உயிர் உரங்கள் அவசியமாக உள்ளது. வேளாண்துறை இவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குகிறது.இதுகுறித்து,உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவிகூறியிருப்பதாவது:பயிர்களின் வளர்ச்சிக்கு, தழைச்சத்தை கிரகித்து கொடுத்து, மணிச்சத்தை கரைத்து, சாம்பல் சத்தையும் வேர் எடுத்துக்கொள்ள உயிர் உரங்கள் பெரிதும் உதவுகின்றன.உயிர் உரம் என்பது, உயிருள்ள நுண்ணுயிரிகளை கொண்ட ஊட்டப்பொருளாகும். இதனை, மண், விதை மற்றும் தாவரங்களில் பயன்படுத்தும் போது, மண்ணின் வேர் பிடித்து, தாவரங்களுக்கு முதன்மை ஊட்டச்சத்தை வழங்குகிறது.மேலும், பயிர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் தன்மையை அதிகரிக்கிறது. வளர்ச்சி ஊக்கிகளை வெளியிடுவதால், பயிர்களின் வளர்ச்சியையும், மண்ணின் கரிமச்சத்தை அதிகரிக்கிறது.பொதுவாக, இரும்பு, அலுமினியம், கால்சியம் தாதுக்கள் மண்ணில் மணிச்சத்தை முடக்கி வைத்து விடும். இந்த சூழலில், ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மேலும் முடக்கி விடும். ஆனால், உயிர் உரமான பாஸ்போ பாக்டீரியா, மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடும் போது, மணிச்சத்தை கரைத்து, பயிர்களின் வேர்கள் கிரகிக்க வழி ஏற்படுத்தும்.இதன் வாயிலாக, 25 சதவீதம் பயிர் வளர்ச்சி, விளைச்சல் அதிகரிக்கும். மேலும், பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மையை அதிகரிப்பதோடு, மண் வாயிலாக பரவும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, சிங்க் பாக்டீரியா ஆகியவை, உடுமலை, குறிச்சிக்கோட்டை, சாளையூர் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மானிய விலையில் உயிர் உரங்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, வேளாண் அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !