| ADDED : ஜூன் 16, 2024 01:27 AM
பல்லடம்:'ஒரே ஒரு உத்தரவில் நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும்,' என, உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, பல்லடத்தில் நேற்று அவர் கூறியதாவது: மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு, விவசாயத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் தர வேண்டும். தொழில்களைப் போன்றே விவசாயத்தையும் மற்றொரு கண்ணாக நினைக்க வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் நீர் ஆதாரத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காவேரி, முல்லைப் பெரியாறு, ஆனைமலை-யாறு - நல்லாறு, காவிரி- - குண்டாறு என, ஒவ்வொரு பாசன திட்டங்களுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் அண்டை மாநிலங்களுடன் ஆண்டுதோறும் போராட வேண்டிய சூழல் உள்ளது. ஒரே உத்தரவில், நதிகளை உடனடியாக தேசிய மயமாக்க வேண்டும். சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி, விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயம், பாமாயில் இறக்குமதியை உடனடியாக தடை செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகிப்பது உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்துக்கு தொழில்கள் மட்டுமன்றி, விவசாயமும் இன்றியமையாதது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் மீதான பார்வையை செலுத்தி, விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.